ஆன்மீக கேள்வி பதில்...(3)
பாவச் செயல்களைத் தவிர்ப்பது எப்படி?
நாம் எங்கே இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகளையெல்லாம் அவர் அறிவார், எங்கும் நிறைந்த அவர் நமக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறார் - இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டு மறவாமல் எப்போதும் நினைவில் வைத்திருந்தால், பாவம் செய்பவர்களாக நாம் இருக்க மாட்டோம்.
இறைவன் அருளைத் துணைாயக் கொண்டு வாழ்ந்தால் தான், மனிதன் தீயவற்றிலிருந்து விலகி வாழ முடியும்.
ஆழமான தெய்வசிந்தனைகள், உள்ளத்தில் தோன்றும தீய சிந்தனைகளை அகற்றும, எனவே நாம் நம் உள்ளத்தை் தூய சிந்தனைகளால் தெய்வ சிந்தனைகளால், புனிதமான சிந்தனைகளால் நிரப்பியபடியே இருக்க வேண்டும்.
மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவனே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் கொண்டவன் தவறு செய்ய மாட்டான்.
மனிதன் கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது. எதிர்காலத்தை நினைத்து ஏங்கவும் கூடாது. மாறாக, நிகழ்காலத்தில் ஆன்மிகமும் அறமும் பொருந்திய வாழ்க்கை நடத்துவதிலேயே கருத்துச் செலுத்த வேண்டும்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோருமே தவறு செய்கிறோம். பிறகு வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறோம். கருணைக் கடலான, தயாபரனான இறைவனும் நம் குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிகிறான்.
கிழக்குத் திசையை நோக்கி அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?
இவற்றுக்குச் சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு.
மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது.
ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம்.
இயமலை வடக்கில் உள்ளது. எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கும் திசையை நோக்கித் தவம் செய்தால், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்றும் கொள்ளலாம்.
சூரிய பகவான் நாள்தோறும் கண்கண்ட தெய்வமாகக் கிழக்கில் உதித்து நம்மை தட்டி எழுப்பி, நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் ஒளி தந்து வழி காட்டுகிறார். ஆதலால் கிழக்குத் திசையை நோக்கிய வழிபாடு சிறந்தது என்று ஆயிற்று. இதற்குச் சாஸ்திரப் பிரமாணமும் உண்டு.
நடுப்பகலில் வடக்கும் தியானத்திற்கும் உரியது. மாலையில் மேற்கும் உரியது. தெற்குத்திக்கில் யமலோகம் என்று சாஸ்திரம் கூறியதால், அது சுப காரியங்களுக்கும், தெய்வ வழி பாட்டுக்கும் உரியதாகக் கொள்ளப்படவில்லை. இந்த நடை முறைகளெல்லாம் சாதாரண மக்களுக்குதான்; ஞானிகளுக்கு இல்லை.
திசை பற்றிய இந்த நியமம் தெய்வத்திற்கும் இல்லை. மயிலாப்பூரில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தட்சிணாமூர்த்தி எல்லா இடங்களிலும் தெற்கு நோக்கித்தான் இருக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வழிபட்ட பவதாரிணியும் தெற்கு நோக்கியே இருக்கிறாள்.
Comments
Post a Comment