ஆன்மீக கேள்வி பதில்...(2)
பூஜையின்போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.
உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்.
முக்கியமாகக் கோயில்களில், பல விதமான தீபங்களை சுவாமிக்கு ஆராதனையின்போது காட்டுகிறார்கள். அதன் கருத்து என்ன?
தீபாராதனையில் வரிசையாக அலங்கார தீபம், ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கர்ப்பூர தீபம் என்று தீபங்களைக் காட்டும் வழக்கம் இருந்துவருகிறது. பலவாகக் காணும் உலகம், ஐம்பூதங்களில் ஒடுங்கி, அது முக்குணங்களில் ஒதுங்கி, அதுவும் ஒன்றுபட்டு, முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கர்ப்பூரம் போல் நிர்க்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பது கருத்து.
திருவிளக்கிலுள்ள சுடரை நாம் குளிரச் செய்யலாமா அல்லது தானாக குளிரவேண்டுமா?
திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. வேங்கடாசலபதி பூஜையின்போது நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. அப்போது பூஜை முடிந்ததும் நெய் தீர்ந்து தானாகவே சுடரைக் குளிரச் செய்வதுண்டு. இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்' என்கிறார்கள்.
பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்?' என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள்.
இவையெல்லாம் திருவிளக்குச் சுடரை வாயினால் ஊதி அணைக்கக்கூடாது அல்லது வெறுங்கையினால் அணைப்பது கூடாது என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எழுந்த கதை என்று நாம் கொள்ளலாம்.
Comments
Post a Comment